Wednesday 1 December 2021

தீர்த்தத் திருவிழா

கண்மணி அறிவாயா,

சொர்க்கத்தின் தீர்த்த விழா மழை! 

அவ்வப்போது

கற்கண்டு அபிஷேகம்

இதோ ஆலங்கட்டி மழை!

என் முகம் கண்டு

நீ உதிர்க்கும் 

மெல்லிய புன்னகையோடு

என்றாவது பொழியும்

கடகட சிரிப்பை போல!

நன்றி வானுக்கும் உனக்கும்..🌧️🌩️🌨️


மழைக்குருவி

வானம் உடைந்து

பெரும் மழை பெய்யுமுன்

தூரல் துவங்கி

தேகம் தொடுவதை

தனிமையில்

இலையற்ற மரத்தில் அமர்ந்து

இளைப்பாறிக் கொண்டே ரசிக்கிறது 

சின்னஞ்சிறு தேன் சிட்டு ஒன்று. 


கார்மேகம் 

தன்னுள் கரைத்துக் கொண்டது 

அந்த கரிய சிறிய குருவியை.

காதலை தன்னுள் புதைத்து

கண்ணை மூடி காலம் கடக்கும்

தலைவனைப் போலே‌.‌..


கரைந்து போவதும் இனிமை தான்.

சிட்டுக்குருவியாய் நான்...😍

Sunday 31 October 2021

உதிர்ந்த இறகாய் காதல்

மொத்த உலகமும் மறந்துபோய் 
பெயர் தெரியாத பறவை ஒன்றின் பின்
அலைகிறது கண்கள்.

அதன் சிறகின் விசையில்
சிக்கிச் சுழல்கிறது மனம்.

பறக்கும் வேகத்தில் அது 
உதிர்த்துவிட்டுப் போன சிறகு
மிதக்கும் சுகத்தில் தான்
மேகம் குளிர்ந்து மழை பொழிகிறது,

அடைமழை காலத்தில் 
அதன் கூட்டில்
கதகதப்பேற்றவே யுகம்யுகமாக
ஆதவன் அணையாமல் எரிகிறது -

என்றெல்லாம் தோன்றும் போதே

என் கண்ணைவிட்டு மறைந்து
மரத்தில் எங்கோ ஒளிந்து கொண்டு
ஒலித்துக் கொண்டிருக்கிறது மெலிதாக.

அந்தப் பறவையின் குரலில்
இப்பிரபஞ்சத்தின் எழுதப்படாத  அத்தனை கவிதைகளும் மொழி பெயர்க்கக் காத்துக்கொண்டிருக்கும் இரகசியம் எனக்குமட்டுமே புரிகிறது.

இந்த உண்மை 
கவிஞர்களுக்குப் புரியும் நாள்
உலகின் அனைத்து காகிதங்களும்
கவிதைகளால் நிறையும்! - 

இவ்வாறு நான் எண்ணிக்கொண்டு இருக்கையில்,
வாலை ஆட்டி, கழுத்தை  திருப்பி,
கண்களை உருட்டி விருட்டென 
வானில் எங்கோ பறந்து புள்ளியாய் தேய்ந்து
மறைந்து போனது நொடியில்.

இனம்புரியா நெருக்கம் காட்டி பின்
யாரோ நீ என்பது போல
திடீரெனத் தொலைந்துபோன பறவை
போன திசை புலப்படாததால்
இல்லை என்றறிந்தே இலைகளுக்குள்
தேடிக்கொண்டு நிற்கிறேன்.

எங்கேனும் ஒளிந்து கொண்டு 
என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற பிரமையில் 
புல்லரிக்கிறது.

என்னைவிட்டு எங்கோ 
தொலைதூரம் போய்விட்ட
பறவையாய் நீ...

வானம் பார்த்துக்
கண்ணீர் உள்ளிழுக்க
விழிவிரிக்கும் சிறுவனாய் நான்...

இதோ காற்றில் மிதக்கும் 
உதிர்ந்த இறகாய்
‌காதல்...