Tuesday 2 October 2012

விடுமுறைநாட்கள்

 விடியல் கூட தாமதமாய் வரும் விடுமுறை நாளில் தான்
வழக்கத்தை விட முன்னதாக வந்து
கதவு தட்டுகிறது உன் நினைவுகள்...!

நீயும் நானும் பயணம் செய்த
விடுமுறை நாட்களிலெல்லாம்
ஓட்டுனர் தேவதையாய் தெரிய
பேருந்து தான் நம் காதல் வாகனம்...!

ஓட்டிக்கொண்டே பயணித்த
ஒவ்வொரு நாள் முடிவிலும்
நாம் விடைபெற்ற தருணங்களின் ஈரம்
இன்னும் என் கண்களில் மிச்சமிருக்கிறது...!

Wednesday 11 July 2012

எங்கு சென்றாய்

எங்கு சென்று தொலைந்தாய் நீ...?
  ...

உன்னைத் தேடித் தேடியே
தலைசுற்றிக்கொண்டிருக்கிறது
இந்த பூமி...

இன்றேனும் வருவாயா...?


வறண்டு கிடக்கிறது என் பூமி
என் வானமெங்கும் கனத்த சுமையுடன்
கால் வலிக்க காத்திருக்கிறது மேகமூடம்.
நானும்தான்  ஒவ்வொருநாளும்
உனக்காக காத்திருக்கிறேன்…
சில நொடியேனும் தழுவிவிட்டுச் செல்லேன்
என் சில்மிஷ்தேன்றலே..!
மேகத்தின் சுமை குறைக்க
இன்றேனும் வருவாயா
வறண்டு கிடக்கிறது என் பூமி…!

Tuesday 12 June 2012

தொல்லைபேசி

எப்பொழுதும் தொலைந்தேகிடக்கும்
என் தொல்லைபேசி
இப்பொழுதெல்லாம்
என் மார்புக்குள் மாட்டிகொண்டு
மூர்சித்தே  கிடக்கிறது
ஒருவேளை நீ அழைத்திருப்பாயோ
என்ற ஏக்கத்தில்தான்
அவ்வப்போது
சுவாசிக்க அனுமதிக்கிறேன் அதை...!

Friday 1 June 2012

அது மழை !

கவிதை ஒன்றும் கடன்காரனில்லை
தவறாமல் வந்து கதவுதட்ட.
விருந்தாளியும் அல்ல
வரவேற்று உபசரிக்க

அது மழை !

சந்தர்பம் வாய்த்துவிட்டால்
ஓயாது கொட்டும் !
அவ்வப்போது யாரும் எதிர்பாராமல்
கோடையிலும் தலைகாட்டும் !

ஆனால்
 சந்தர்ப்பம்தான் 
 இப்படி எப்போதும்
 அசந்தர்ப்பங்களிலேயே சம்பவிக்கிறது...

நீளும் காத்திருப்புகள்...

ஏதேதோ காரணங்களுக்காய்
காத்திருப்புகள்   நீள்கின்றன!

சன்னல் வழித்தெரியும்
தூரத்து கொடிமரத்தில்
வெகுநேரமாய் காத்திருக்கும் காக்கை
யாருக்காக காத்திருக்கிறது ? - இல்லை
யாரேனும் காத்திருக்கமாட்டார்களா
பொறுப்பற்று அமர்ந்திருக்கிறதே
யாருமற்ற கொடி மரத்தில்...

சிந்தனையோடே மின்சாரத்திற்காக
காத்திருக்கிறேன் - அதிகாலை முதல்.
ஒருவழியாய் அந்த நீண்ட பிற்பகலில்
மின்சாரம் வந்தது - அப்படியே
எனக்காக காத்திருக்கும்
மற்றொரு  அலுவளுக்கான அழைப்பும்...!

ஏதேதோ காரணங்களுக்காய்
காத்திருப்புகள்   நீள்கின்றன!

Tuesday 29 May 2012

கண்ணீர் செவிலிகள்...

என் கன்னங்கள் பெற்ற
கடைசி முத்தத்தின்
வெப்பத்தை சரிபார்க்க
அடிக்கடி அனுப்பிவைக்கிறேன் -
கண்ணீர் செவிலிகளை !

கன்றிச் சிவந்த
கன்னங்களை அல்ல - என்
கழுத்தடியில் தொட்டுப்பார்த்து
சொல்கின்றனர்,
உன் பிரிவு சுடுகிறதென...!

Thursday 24 May 2012

நீ இன்றி அமையாது என் உலகம்....!

நீ கவிதையா  இல்லை காதலா 
இல்லை இல்லை ,
இவை இரண்டுக்கும் இடைப்பட்ட
ஏதோ ஒரு இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாய் நீ!

கொஞ்சம் வாசிக்கிறேன்
கொஞ்சம் நேசிக்கிறேன்.!

நீ ஒளியா இல்லை இருளா
இல்லை இல்லை
நான் இருள் நீ ஒளி.
இரு துருவங்களானாலும் அன்பே,
சிலநிமிடங்கள்
நாம் சந்தித்து, நேசம் பகிர்ந்து
விடைபெறும் பொழுதுகள்...
அழகான மாலை வேளைகள் !

சிலநிமிடங்களே நிகழ்ந்தாலும்
இது நிரந்தரம்!
என் சூரியனே,
அஸ்தமிக்கும் போது
இன்னும் அழகாய் இருக்கிறாய் நீ
நானும் விடைகொடுக்கிறேன்
ஒவ்வொருமுறையும்,
நாளை வருவாய் - என்ற நம்பிக்கையில் !

தவறாமல் வந்துவிடு...
"நீ இன்றி அமையாது என் உலகம்!"

Monday 14 May 2012

காதலின் அடுத்த கட்டம்

ஓராயிரம் அலுவலுக்கும்
ஓயாது உன்னை வட்டமிடும்
நண்பர்களுக்கும் மத்தியிலும்,
அடிக்கடி எனைத்தேடும்
உன் விழியன் வேகத்தையும்
நான் பார்த்துவிட்டால் பூக்கும்
அந்த மந்தகாசப் புன்னகையும் கண்டு
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது

என் அருகாமையின் தேவை
அதிகரித்துப்போனது உனக்கு...!

நானின்றி நாட்கள் நீள்வதும்
அருகிருக்கும் தருணங்கள்
புயலாய் கடப்பதுமென
காதலுக்கே உரிய மாயாஜாலங்கள்
மெல்ல மெல்ல ரகசியமாய்
அரங்கேறத் துவங்கிவிட்டன.

அடுத்து நிகழ்வதரிய ஆவலா...
அப்படியெனில் என் அருகே வந்து
வேறேதும் பேசாது மெதுவாய் கண்மூடி
மூச்சை ஆழமாய் இழுத்துவிடு...

கண்களை திறக்கையில்
காதலின் அடுத்த கட்டம்
கண்முன்னே தெரியும்...!

Thursday 10 May 2012

ஒற்றை மழைத்துளி

என் ஒற்றை மழைத்துளி நீ!
கடலின் மேல் மட்டத்தில்
உனக்காக வாய்திறந்து மிதக்கும்
சின்னஞ்சிறு சிப்பி நான்...


சில பொழுது கிடைத்துவிடுகிறாய்
பல முறை தவறவிடுகிறேன் உன்னை...
உன்னை ஏந்திகொள்வது
ஒருவகையில் உறுத்தல் தான்


இருப்பினும்,
மழைநீரின் உறுத்தலில் தான்
உமிழ்நீர் சுரக்குமாம்  -
முத்தும் பிறக்குமாம்.


சிப்பிகள்
தான் பெற்ற மழைத்துளியை
தானாய் உமிழ்ந்ததாய் - இதுவரை
கேட்டதில்லை நான்!


என்னில் நீ விழுந்த மறுநொடி
காலடியில் மணல் பரப்பும்
தலைக்குமேல் தண்ணீருமாய்
கண் மூடி சிந்திக்க துவங்கிவிடுகிறேன்,


உன்னைச்சுற்றிச் சுற்றியே
ஓராயிரம் கவிதைகள்...


என் நாக்கடியில் சுடும்
ஒற்றை மழைத்துளியில்
ஓராயிரம் முத்துக்கள் தரும்
ஒரே சிப்பி நான்தான் போலும்...


இதோ, இப்போதும் காத்திருக்கிறேன் - 
இந்த விரிந்த கடற்பரப்பில் - என் 
ஒற்றை மழைத் துளியே 
உனக்காக...!

வேர்களின் சுவை...

புதைக்கப்பட்டவை எல்லாம்
முட்டிக்கொண்டு முளைக்குமாயின்
அவை - விதக்கப்பட்டவையென
திருத்தப்பட வேண்டும்!

தற்பொழுதெல்லாம்
தவிர்த்தல்களும்
தவிர்தல்களும் - தானாய்
அரங்கேறுகின்றன நம்மிடையே!

போதும் நீ - எனப் புதைக்கின்றேன்
உன்னை என் உள் ஆழத்தில்.

சம்மதித்த நீயும் - உட்சென்று
சத்தமின்றி வேர்விட்டுக்
கிளைபரப்புகிறாய் - என்
ஐம்புலன்கள் வழியே...

என்னில் வேர்விட்டு - ஏன்
எனக்கு வெளியே பூ பூக்கிறாய்?
மண்ணுக்கு வேர்கள் மட்டும் தான்
சொந்தமா என்ன...?

என்னதான் நீ எனக்கு வெளியே வளர்ந்து
வாசலில் பூச்சொரிந்தாலும்  - நீ
என்னில் விதைக்கப்பட்டவன் !

உன்வேர்கள் - எனக்குள்
புதையுண்டுபோய்க் கிடக்கின்றன.
என் ஒவ்வொரு துகளிலும்
பின்னிக்கொண்டு கிடக்கும்
உன் வேர்களை,
பிரிப்பது சாத்தியமில்லை!

ஆணிவேரைப் பிடுங்கிப்போட்டாலும்
பக்கவேர்கள் சல்லிவேர்களெல்லாம்
சத்தியமாய் எனக்குள் இருக்கும்...!

தன்னில் மட்கிப்போனாலும்
வேர்களின் சுவையை
மண் மறப்பதில்லை...!

கொள்ளளவுகள் ...!

என் உயிரின் ஆழ அகலங்களில்
முழுவதுமாய் நிறைகிறாய்!
வழிந்து வீனாகவிட மனமில்லை.
இதோ ,
என் கொள்ளளவுகள்
கூடிக்கொண்டே போகின்றன...

பூகம்பம்!

உன் பார்வை வட்டத்திற்குள்
பறந்து திரிந்து - சத்தமின்றி
உன் தோட்டத்துப் பூக்களை
காதலாய் முகர்ந்து,

போகிற போக்கில் உன்
சட்டையில் மோதி
வண்ணம் உதிர்த்துச் சென்ற
வண்ணத்துப் பூச்சியல்ல நான்.

ஓசைகளுடன் உன் தேசம் நுழைந்த
பூகம்பம் நான் ! - என்னால்
உனக்குள் ஏராள மாறுதல்கள்!

இல்லையென்று பொய்யுரைக்காதே
உன் விழிகளில் தெரிகிறது
விளைவுகளின் அளவுகோல்.

என்னால்  உன் நிலப்பரப்புகள் மாறிப்போயின
நீர்நிலைகள் கூடிப்போயின! - ஆம்
பட்டம்பூசியல்ல- நான் பூகம்பம்!

என் பாதிப்புகள் இறுதிவரையில்
இருக்கும் உன்னுடன்...

முகவரி !

கவிதை தெருவின்
கடைசி வீட்டில் குடியிருக்கிராயோ...
ஒவ்வொரு முறையும்
உன்னை சந்திக்க வருகையிலெல்லாம்
கவிதைகளைத் தாண்டியே
வரவேண்டி இருக்கிறது...

காதல் ராட்சஷி...

ஏனிப்படி தித்திக்கும் விஷத்தை
தேடிக்  குடிக்கிறாய்...
சிலிர்க்கும் மின்சாரத்தை
மகிழ்ந்து தொடுகிறாய்...

வேடிக்கையாய் பேசியே
நேசிக்கவும் வைத்துவிட்டாய் என்னை!

இருப்பினும் 
இதோ மீண்டுமோர் எச்சரிக்கை - 
நான் உன் தலைகோதும்  தென்றலல்ல
உன் வேர் அசைக்கும் புயல்...

என் வேகம் தெரிந்து காதல் செய்!

நான் காமக் குழந்தை.
ஆனால் காதல் ராட்சஷி ...

உன்னை கண்ணிமை முதல்
கால் நகம் வரை
காதலித்தே கொன்றுவிடுவேன்
கவனமாய் இரு...

என்னால் உன் நாட்களின் நீளம் குறைந்துபோகும்.
சுற்றம் மறக்கும் - சுகம் கூடும்
நாளொன்று போக வயதொன்று குறையும்!
பருவநிலை நிலைத்து
உன் பாதையெங்கும் பூப்பொழியும்.

காதில் விழுவதெல்லாம் கவிதையாகும்,
கண்ணில் பட்டதெல்லாம் கலையாகும்.

உணவு பிடிக்கும் உறக்கம் சுகிக்கும்
கனவு பிறக்கும் காதல் சுரக்கும்
இறக்கையும் முளைக்கும்.
இதயம் மட்டும் தவிக்கும்...

சுருங்கச்சொன்னால் சொர்க்கத்தில் இருப்பாய்...
எனைச் சற்றே விலகினாலும் செத்துப்போவாய்!
நொடிதோறும் காதலிக்கப் படுவாய்...
எனைப் பிரிகையில் நொடிகூட யுகமாய் உணர்வாய் !

ஒன்றை மட்டும் நினைவில் வை.

காதல் கண்ணாமூச்சியில்
எப்போதும் நானே வெல்வேன்
பரிசு மட்டும் நீ பெறுவாய்!
தீண்டத் துடித்து தோற்ப்பாய்
தேகம் குளிரச் சூடாவாய்.!  

முடிவில் மோகம் முற்றிச் சாவாய்
பின் என் காதல் தின்று மீள்வாய்!

வேடிக்கை என்னவென்றால்
வேண்டாம் இந்த இம்சை என்று
விலகிப்போக நினைத்து
மீண்டும் முதலிலிருந்து துவங்குவாய்...

கடைசியாய் காதலுக்குப் பழகிப்போவாய்...
தவறினால் தவித்துப்போவாய்...

இவையெல்லாம் உனக்குச்
சம்மதமென்றால் நீ தொடரலாம்...
தீராத காதல் உண்டு என்னிடம்...!
நான் காதல் ராட்சஷி...

Wednesday 9 May 2012

ஒரு யுகக் கோபம்

இனி உன்னுடன்
பேசுவதாய் இல்லை போ!
ஒரு யுகக் கோபம்
உன் மேல் எனக்கு...

விடைபெறும் தருணங்களில்
விவரிக்க முடியாது போனாலும்
விழி பார்த்து துயர் தீர்க்க
தோன்றாது போனதேன்.?

நீ இருப்பதற்கான தடயங்கள் தேடி
இல்லாத ஏக்கத்தில்,
வெகு நேரம் நின்றுகொண்டிருந்தேன்
நீ சென்ற பாதையில்!

இனி ஒருபோதும்,
விலகும்போது விடைபெராது போய்விடாதே
வீணாய் புலம்புகிறது மனம்...

போகட்டும் விடு.!
நான் தான் உன்னுடன் பேசுவதில்லையே-
உன் மேல் எனக்கு
ஒரு யுகக் கோபம்...

என் கவிதைகளுக்கு லாபம்!

உன் கடைக்கண் பார்வைகளும்
என்னுடனான மௌன சம்பாஷனைகளும்
சிலிர்ப்பை உள்ளே ஊற்றெடுக்கச் செய்தாலும்,
ஏனோ விலகிசெல்லவே விரும்புகிறேன்
என் பந்தமற்ற பரவசமே...! 

உன் அலையும் கண்களில்
அவ்வப்போது காமம் கண்டாலும்,
உறவாகமுடியாத உனை
உச்சிமுகரவே உளம் விரும்புவதேன்
என் காலம் கடந்த காதலே...?

உண்ணும் போதும் உடுதும்போதும்
உன் நினைவு வந்தாலும்
உரங்கும்போது  மட்டும்
உனக்கான கவிதைகள் வந்தெனை
வதம் செய்வதேன்...?

எது எப்படியோ உன்னால்
என் கவிதைகளுக்கு லாபம்...! 

Tuesday 8 May 2012

தொலைந்துகொண்டிருக்கிறேன்!

என்ன தொலைத்தாய்..?
அங்கும் இங்குமாய்
 உன் விழிகள்
எதைத்தேடிகொண்டிருகின்றன ?
இதோ
 நான் தொலைந்துகொண்டிருக்கிறேன்
உன் தேடும் பாவனையில்...

ஆசை...

ஏதேனும்  ஒரு கொட்டும் மழை நாளில்,
கண்ணாடிச் சுவர்களுக்குபின்
எதிரெதிரில் அமர்ந்து,
ஒருகோப்பை தேநீரை,
வெகுநேரம் குடிக்கின்ற சாக்கில்
உன் வாசத்தை நாசியில் நிரப்பிக்கொண்டு
சலனம் ஏதும் காட்டமல்
உன் கண்களை உற்றுப் பார்த்தபடி

உன் குறும்புகள் அனைத்தையும்
ரகசியமாய்  ரசித்துவிட்டு
சற்றே மழை விட்டதும்
ஒன்றுமே நடவாதது போல்
சட்டென கைகுலுக்கி விடைபெற்று
மெல்லிய சாரலில் மட்டுமல்ல
உன் சிலிர்ப்பூட்டும் நினைவிலும் நனைந்தபடி
வெகுதூரம் பயணிக்க ஆசை...

மழை வரும் மற்றொரு நாளில் வருவாயா ..?
கனவுகளோடு காத்திருக்கிறேன்!

முகமூடி மனிதர்கள்

புன்னகை இனிப்பில் பூசப்பட்ட முகங்களுக்குபின்
உவர்ப்பும் துவர்ப்பும் புளிப்பும் கசப்புமாய் 
எத்தனை சுவைகள்...
இதில் இயல்பிலேயே இனிப்பும் உண்டு
கண்டுபிடிப்பது தான் கஷ்டம்...
இனிப்புப் பூச்சு
உமிழ் நீரில் கரைந்த பின் தான் தெரிகிறது
உண்மைச்சுவை... - இப்படி 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைத்தும் 
உடனே கரைந்துபோகும் உண்மைகளின் சாயலில்
இனிப்பை தேடி ஓடி
ஏதேதோ சுவைப்பதிலயே கழிகிறது காலம்!

புன்னகை

 ஒருபொட்டுப் பனித்துளியில்
அகப்படும் வானம் போல்
உன் ஒற்றைப் புன்னகையில்
வசப்படுகிறது என் வாழ்க்கை...!

காதல் கடன்

காதலுக்கு  கையூட்டாய் 
கன்னத்தில் ஒன்று கேட்கும் உனக்கு
ஏன் தெரியவில்லை ...?
காதலில் முத்தங்கள் 
கடனாய் மட்டுமே 
கொடுக்கப்படும் என்று!