Monday 24 December 2018

குட்டி குட்டி மழை மேகங்கள்...

சமையலறை சன்னல் வழியே
வானம் பார்த்து மழை ரசிப்பதே
 பெரும்பேறாய் இருக்கிறது
இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு..

 மழையே அவளானபோதும்
ஏனோ நனையாமலே ஏங்குகிறாள்...

குடைக்குள் மட்டுமே பெய்துகொண்டிருக்கும்
இந்த குட்டி குட்டி மழை மேகங்கள்
விஷ்வரூபமெடுத்தால் -குடைகள்
காற்றோடு போகுமெனத்தெரிந்திருந்தும்

குறுகியே பெய்கிறது மழை
வானம்போல் வரிந்தே நிற்கிறது குடை...

Tuesday 4 December 2018

திறந்து கிடக்கும் சன்னல்...

ஒவ்வொரு மழை நாளையும்
ஒருவாறு கடந்து போகிறேன்
நீயின்றி - நினைவுகளுடன்!

அடித்துப் பெய்கையில்
உன் காதலையும்
தூரல் போடுகையில் உன்
காமத்தையும் - மேகம் கணத்து
பெய்யாது நிற்கையில்
உன் கோபத்தையும் நினைவூட்டும்
இந்த மழைகாலத்தில் மட்டுமேனும்
வந்துபோயேன்!

ஒரு சிறகில் சினமும்
மறுசிறகில் சினேகமும்
சுமந்து திரியும் மழைக்குருவியே
உனக்காக திறந்தே
கிடக்கின்றன என் சன்னல்கள்!

குடையும் ஆகிறாய்...

வறண்டு கிடக்கும்
வானத்தின் ஓரத்தில்
திடீரெனத்திரண்ட மேகம்போல்
கணத்தில் தோன்றி
காதல் பொழிகிறாய்!

குளிர் காற்றாய் காதோரம் முத்தமிட்டு
மயிற்கூச்செரிய மந்தகாசம் செய்து
மயங்க வைக்கிறாய்
மின்னல் சிரிப்பில்!

இடியுடன்கூடிய
மழைவரக்கூடுமென
வாநிலை அறிக்கை கூட
எச்சரிக்கை செய்யவில்லை...

எதேட்சையாய்
எங்கிருந்தோ வந்து
என் வானவெளியெங்கும்
நின்று பொழிகிறாய்...

இடியோசை இன்னிசை பாட
திடீரென கொட்டித்
தித்திக்கும் மழையில்
நான் திக்குமுக்காட
சிறகு விரித்து சேய்பேனும்
சிட்டுக்குருவியாய் - எனை
கட்டிக்கொண்டு கதகதப்பூட்டி
குடையும் ஆகிறாய்...