Thursday 10 May 2012

வேர்களின் சுவை...

புதைக்கப்பட்டவை எல்லாம்
முட்டிக்கொண்டு முளைக்குமாயின்
அவை - விதக்கப்பட்டவையென
திருத்தப்பட வேண்டும்!

தற்பொழுதெல்லாம்
தவிர்த்தல்களும்
தவிர்தல்களும் - தானாய்
அரங்கேறுகின்றன நம்மிடையே!

போதும் நீ - எனப் புதைக்கின்றேன்
உன்னை என் உள் ஆழத்தில்.

சம்மதித்த நீயும் - உட்சென்று
சத்தமின்றி வேர்விட்டுக்
கிளைபரப்புகிறாய் - என்
ஐம்புலன்கள் வழியே...

என்னில் வேர்விட்டு - ஏன்
எனக்கு வெளியே பூ பூக்கிறாய்?
மண்ணுக்கு வேர்கள் மட்டும் தான்
சொந்தமா என்ன...?

என்னதான் நீ எனக்கு வெளியே வளர்ந்து
வாசலில் பூச்சொரிந்தாலும்  - நீ
என்னில் விதைக்கப்பட்டவன் !

உன்வேர்கள் - எனக்குள்
புதையுண்டுபோய்க் கிடக்கின்றன.
என் ஒவ்வொரு துகளிலும்
பின்னிக்கொண்டு கிடக்கும்
உன் வேர்களை,
பிரிப்பது சாத்தியமில்லை!

ஆணிவேரைப் பிடுங்கிப்போட்டாலும்
பக்கவேர்கள் சல்லிவேர்களெல்லாம்
சத்தியமாய் எனக்குள் இருக்கும்...!

தன்னில் மட்கிப்போனாலும்
வேர்களின் சுவையை
மண் மறப்பதில்லை...!

No comments:

Post a Comment