Friday 13 September 2019

விடுமுறை நாட்களில்...

விடுமுறை நாட்களில்
விடாமல் பெய்ய வேண்டும் என்ற
வேண்டுதலில்  துவங்குகிறது
என் பக்தியின் பரிணாமம்

இருக்கிறதா இல்லையா என்ற
சர்ச்சைக்குரிய சாமியை - இருக்கிறதென்று
சாட்சி சொல்ல வருவதாகவே
கருதுகிறேன் மழையை

காய்ந்த மண் புழுதி பறக்க
காத்திருக்கும் வேளையில்
மேகம் உடைத்து சிதறும் ஒவ்வொரு துளியும்
குட்டி குட்டி வரமாகவே வந்தடைகிறது பூமியை

கார்மேகம் கூடும் ஒவ்வொரு முறையும்
சிறிது தூர பயணத்திற்கும்
சூடான காஃபிக்கும்
தயாராகும் பொருட்டு

அவசியமான அலுவல்களைக்கூட
அவசர அவசரமாய்
முடிக்க வேண்டுமென
முடுக்கி விடுகிறேன் மூளையை


சிலநேரம் சில்லென்ற துளிக்கரத்தால்
தழுவிக்கொண்டாலும்
எப்போதும் காத்திருப்பதில்லை
கார்முகில்

அப்படி காத்திருக்காமல்
கடந்துபோன நாட்களிலெல்லாம்
சன்னல் வழியே கண்களால் தொட்டு
கற்பனையில் மட்டுமே நனைகிறேன்

காசுவேண்டி முடங்கி
ஆசைகளை  அடக்கி
கணினிமுன் கனவுதொலைத்து
ஈரமின்றி அமர்ந்திருக்கையில்

பொருளாதார பூதத்தை சபிக்காமல் விட்டதில்லை

தத்துவமாய் சிலர்
தர்க்கரீதியாக சிலர்
அக்கறையில் சிலர்
ஆற்றாமையில் சிலர் என

அவரவர் பங்கிற்கு அறிவுரைக்கின்றனர்.

பொருளே பிரதானம்
மகிழ்வெல்லாம் பணத்தாலென்றும்
சந்தோஷங்கள் சேமித்த
பணத்தால் வாராதென்றும்...

போதிக்கப்படும் வேதாந்தங்களின்
வெப்பத்திலேயே உலர்ந்து போகிறது
மழை ஈரம்,
மண்ணோடும் மனதோடும்.

சுற்றம் இடும் கூச்சல்களெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து
இரைச்சலற்ற ஓர் உலகிற்கு சென்றுவிடுகிறேன்
மழை கண்ட சில நிமிடங்களில்

அங்கே துளிகளின் பேரிசை - அது
இறைவன் என்னுடன் நடத்தும்
சம்பாஷணை என்றே சிலிர்க்கிறேன்.
புரியாவிடினும் புனிதம் உணர்கிறேன்

வேலை விடுத்து வர்த்தகம்  வெறுத்து
மரமாய் மழை ஏந்தவே ஏங்குகிறேன்.
கூரைக்குள் நின்று வேடிக்கை பாராமல்
நனைந்து சிறகுலர்த்தவே துடிக்கிறேன்

இல்லாத கடவுளை இருக்குமென
நம்பவைப்பது இயலாமை ! - இதை
அலுவல் வேளையில் வந்து - ஆசையாய்
அழைக்கும் மழைமேகத்தினால் கண்டுகொண்டேன்.

முழுதாய் ரசிக்காமல் சன்னலில் எட்டிப்பார்த்து
சலிப்புடன் வேலை செய்கையில்
காமம் கழுவாமல் முத்தங்களோடு முடிந்துபோன
முதலிரவின் அபத்தமாய் அல்லாடுகிறது மனம்

ஆக, விடுமுறை நாட்களில்
விடாமல் பெய்ய வேண்டும் என்ற
வேண்டுதலில்  துவங்குகிறது
என் பக்தியின் பரிணாமம்...!

No comments:

Post a Comment