Wednesday, 8 January 2025

மீண்டும் புன்னகை

ஒரு பறவையின் கூட்டில் சிறிது காலம் வாடகைக்கு வசித்த 
நினைவுகளில் நீள்கிறது 
எஞ்சிய என் நாட்கள்.

விடிந்ததும் பறந்துவிடும், 
அந்தப் பறவையின் வாசமும்
அது உதிர்த்துவிட்டுப் போன சிறகும்
கூட்டின் கதகதப்பும் 
என் காத்திருப்புகளைக் 
கவிதைகளாக்கிய அதிசயத்தை 
அந்த பறவை அறிந்திருக்க வாய்ப்பில்லை!

காற்றில் ஆடும் அதன் கூட்டின்
ஒரு மூலையில், என் உயிரின் ஒருதுளி
இன்னும் ஒட்டிக்கொண்டு 
ஊஞ்சலாடும் இரகசியத்தை 
அந்தப் பறவை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை!

சூரியன் மறையும் போது கூடுதிரும்பும்
அந்தப் பறவையின் பரவசமும் 
அதன் ஆர்ப்பரிக்கும் குரலும் ரசிக்க வேண்டியே நாளெல்லாம் அந்த கூட்டில் 
நான் காத்திருந்த தருணங்களை 
அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

தன் பழைய கூட்டைத் துறந்து
எங்கோ தொலைதூரத்தில்
வேறு கூடுகட்டி குடிபெயர்ந்து விட்ட
அந்தப் பறவைக்காகக் காத்திருந்து களைத்துப்போன என் கண்கள்
தானாக மூடிக்கொண்டபின்,

அந்தப் பறவையின் கூட்டில் சிறிது காலம் வாடகைக்கு வசித்த நினைவுகளால், 
இருகிய முகத்தில் 
மீண்டும் இழைகிறது புன்னகை...!


மழையானவனுக்கு மண்ணின் மடல்

சில பொழுது 

இடி முழக்கங்களும்

புயலின் பேரிரைச்சலுமாய்

பூமியதிரப் புன்னகைக்கிறாய்!

பெரும்பாலும்

வருவது போல் பாசாங்கு செய்து

வானெல்லாம் மாயை காட்டி - வராமலே

மின்னலாய் கண் சிமிட்டுகிறாய்!

ஆனாலும் அவ்வப்போது 

ஆரவாரமில்லாமல் தூறலாய் வந்து

அங்கங்கே மென்மையாய் முத்தமிட்டு

என் தேகம் குளிர்விக்கிறாய்!

எப்போதாவது கோபம் கொண்டு

என் உள்ளம் வாடப் 

பாராமுகம் காட்டி - வெளிரிய

வானமாய் முரைக்கிறாய்!

என் மழையானவனே, இது

உனக்காகத்

தவம் கிடக்கும் இந்த

மண்ணின் மடல்.

உன் வருகைக்கு ஏங்கி

வானம் நோக்கித்

தாகம் தேக்கி காத்திருக்கும்

பூமிப் பெண்ணின் மடல்!

இறங்கி வருவதில் ஏனிந்த தயக்கம்

வரும் வழியில் திரிசங்கு சொர்க்கமேதும்

அந்தரத்தில் உள்ளதோ

அதன் பொருட்டு தாமதமோ?

ஆகட்டும்.

ஆனால் நீ எங்கு விழுந்தாலும்

என்னையே வந்து சேர்வாய் என்பது

புவியீர்ப்பு விதி...

இடையில் ஏதும்

இடையூறு நேர்ந்தாலும்

மண்ணைச் சேர்வதே 

மழையின் தன்மை!

மறந்துவிடாதே,  மறுக்க முடியாது

உன்னால் என்னை.