Wednesday 1 December 2021

தீர்த்தத் திருவிழா

கண்மணி அறிவாயா,

சொர்க்கத்தின் தீர்த்த விழா மழை! 

அவ்வப்போது

கற்கண்டு அபிஷேகம்

இதோ ஆலங்கட்டி மழை!

என் முகம் கண்டு

நீ உதிர்க்கும் 

மெல்லிய புன்னகையோடு

என்றாவது பொழியும்

கடகட சிரிப்பை போல!

நன்றி வானுக்கும் உனக்கும்..🌧️🌩️🌨️


மழைக்குருவி

வானம் உடைந்து

பெரும் மழை பெய்யுமுன்

தூரல் துவங்கி

தேகம் தொடுவதை

தனிமையில்

இலையற்ற மரத்தில் அமர்ந்து

இளைப்பாறிக் கொண்டே ரசிக்கிறது 

சின்னஞ்சிறு தேன் சிட்டு ஒன்று. 


கார்மேகம் 

தன்னுள் கரைத்துக் கொண்டது 

அந்த கரிய சிறிய குருவியை.

காதலை தன்னுள் புதைத்து

கண்ணை மூடி காலம் கடக்கும்

தலைவனைப் போலே‌.‌..


கரைந்து போவதும் இனிமை தான்.

சிட்டுக்குருவியாய் நான்...😍

Sunday 31 October 2021

உதிர்ந்த இறகாய் காதல்

மொத்த உலகமும் மறந்துபோய் 
பெயர் தெரியாத பறவை ஒன்றின் பின்
அலைகிறது கண்கள்.

அதன் சிறகின் விசையில்
சிக்கிச் சுழல்கிறது மனம்.

பறக்கும் வேகத்தில் அது 
உதிர்த்துவிட்டுப் போன சிறகு
மிதக்கும் சுகத்தில் தான்
மேகம் குளிர்ந்து மழை பொழிகிறது,

அடைமழை காலத்தில் 
அதன் கூட்டில்
கதகதப்பேற்றவே யுகம்யுகமாக
ஆதவன் அணையாமல் எரிகிறது -

என்றெல்லாம் தோன்றும் போதே

என் கண்ணைவிட்டு மறைந்து
மரத்தில் எங்கோ ஒளிந்து கொண்டு
ஒலித்துக் கொண்டிருக்கிறது மெலிதாக.

அந்தப் பறவையின் குரலில்
இப்பிரபஞ்சத்தின் எழுதப்படாத  அத்தனை கவிதைகளும் மொழி பெயர்க்கக் காத்துக்கொண்டிருக்கும் இரகசியம் எனக்குமட்டுமே புரிகிறது.

இந்த உண்மை 
கவிஞர்களுக்குப் புரியும் நாள்
உலகின் அனைத்து காகிதங்களும்
கவிதைகளால் நிறையும்! - 

இவ்வாறு நான் எண்ணிக்கொண்டு இருக்கையில்,
வாலை ஆட்டி, கழுத்தை  திருப்பி,
கண்களை உருட்டி விருட்டென 
வானில் எங்கோ பறந்து புள்ளியாய் தேய்ந்து
மறைந்து போனது நொடியில்.

இனம்புரியா நெருக்கம் காட்டி பின்
யாரோ நீ என்பது போல
திடீரெனத் தொலைந்துபோன பறவை
போன திசை புலப்படாததால்
இல்லை என்றறிந்தே இலைகளுக்குள்
தேடிக்கொண்டு நிற்கிறேன்.

எங்கேனும் ஒளிந்து கொண்டு 
என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற பிரமையில் 
புல்லரிக்கிறது.

என்னைவிட்டு எங்கோ 
தொலைதூரம் போய்விட்ட
பறவையாய் நீ...

வானம் பார்த்துக்
கண்ணீர் உள்ளிழுக்க
விழிவிரிக்கும் சிறுவனாய் நான்...

இதோ காற்றில் மிதக்கும் 
உதிர்ந்த இறகாய்
‌காதல்...

Friday 13 September 2019

விடுமுறை நாட்களில்...

விடுமுறை நாட்களில்
விடாமல் பெய்ய வேண்டும் என்ற
வேண்டுதலில்  துவங்குகிறது
என் பக்தியின் பரிணாமம்

இருக்கிறதா இல்லையா என்ற
சர்ச்சைக்குரிய சாமியை - இருக்கிறதென்று
சாட்சி சொல்ல வருவதாகவே
கருதுகிறேன் மழையை

காய்ந்த மண் புழுதி பறக்க
காத்திருக்கும் வேளையில்
மேகம் உடைத்து சிதறும் ஒவ்வொரு துளியும்
குட்டி குட்டி வரமாகவே வந்தடைகிறது பூமியை

கார்மேகம் கூடும் ஒவ்வொரு முறையும்
சிறிது தூர பயணத்திற்கும்
சூடான காஃபிக்கும்
தயாராகும் பொருட்டு

அவசியமான அலுவல்களைக்கூட
அவசர அவசரமாய்
முடிக்க வேண்டுமென
முடுக்கி விடுகிறேன் மூளையை


சிலநேரம் சில்லென்ற துளிக்கரத்தால்
தழுவிக்கொண்டாலும்
எப்போதும் காத்திருப்பதில்லை
கார்முகில்

அப்படி காத்திருக்காமல்
கடந்துபோன நாட்களிலெல்லாம்
சன்னல் வழியே கண்களால் தொட்டு
கற்பனையில் மட்டுமே நனைகிறேன்

காசுவேண்டி முடங்கி
ஆசைகளை  அடக்கி
கணினிமுன் கனவுதொலைத்து
ஈரமின்றி அமர்ந்திருக்கையில்

பொருளாதார பூதத்தை சபிக்காமல் விட்டதில்லை

தத்துவமாய் சிலர்
தர்க்கரீதியாக சிலர்
அக்கறையில் சிலர்
ஆற்றாமையில் சிலர் என

அவரவர் பங்கிற்கு அறிவுரைக்கின்றனர்.

பொருளே பிரதானம்
மகிழ்வெல்லாம் பணத்தாலென்றும்
சந்தோஷங்கள் சேமித்த
பணத்தால் வாராதென்றும்...

போதிக்கப்படும் வேதாந்தங்களின்
வெப்பத்திலேயே உலர்ந்து போகிறது
மழை ஈரம்,
மண்ணோடும் மனதோடும்.

சுற்றம் இடும் கூச்சல்களெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து
இரைச்சலற்ற ஓர் உலகிற்கு சென்றுவிடுகிறேன்
மழை கண்ட சில நிமிடங்களில்

அங்கே துளிகளின் பேரிசை - அது
இறைவன் என்னுடன் நடத்தும்
சம்பாஷணை என்றே சிலிர்க்கிறேன்.
புரியாவிடினும் புனிதம் உணர்கிறேன்

வேலை விடுத்து வர்த்தகம்  வெறுத்து
மரமாய் மழை ஏந்தவே ஏங்குகிறேன்.
கூரைக்குள் நின்று வேடிக்கை பாராமல்
நனைந்து சிறகுலர்த்தவே துடிக்கிறேன்

இல்லாத கடவுளை இருக்குமென
நம்பவைப்பது இயலாமை ! - இதை
அலுவல் வேளையில் வந்து - ஆசையாய்
அழைக்கும் மழைமேகத்தினால் கண்டுகொண்டேன்.

முழுதாய் ரசிக்காமல் சன்னலில் எட்டிப்பார்த்து
சலிப்புடன் வேலை செய்கையில்
காமம் கழுவாமல் முத்தங்களோடு முடிந்துபோன
முதலிரவின் அபத்தமாய் அல்லாடுகிறது மனம்

ஆக, விடுமுறை நாட்களில்
விடாமல் பெய்ய வேண்டும் என்ற
வேண்டுதலில்  துவங்குகிறது
என் பக்தியின் பரிணாமம்...!

Monday 24 December 2018

குட்டி குட்டி மழை மேகங்கள்...

சமையலறை சன்னல் வழியே
வானம் பார்த்து மழை ரசிப்பதே
 பெரும்பேறாய் இருக்கிறது
இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு..

 மழையே அவளானபோதும்
ஏனோ நனையாமலே ஏங்குகிறாள்...

குடைக்குள் மட்டுமே பெய்துகொண்டிருக்கும்
இந்த குட்டி குட்டி மழை மேகங்கள்
விஷ்வரூபமெடுத்தால் -குடைகள்
காற்றோடு போகுமெனத்தெரிந்திருந்தும்

குறுகியே பெய்கிறது மழை
வானம்போல் வரிந்தே நிற்கிறது குடை...

Tuesday 4 December 2018

திறந்து கிடக்கும் சன்னல்...

ஒவ்வொரு மழை நாளையும்
ஒருவாறு கடந்து போகிறேன்
நீயின்றி - நினைவுகளுடன்!

அடித்துப் பெய்கையில்
உன் காதலையும்
தூரல் போடுகையில் உன்
காமத்தையும் - மேகம் கணத்து
பெய்யாது நிற்கையில்
உன் கோபத்தையும் நினைவூட்டும்
இந்த மழைகாலத்தில் மட்டுமேனும்
வந்துபோயேன்!

ஒரு சிறகில் சினமும்
மறுசிறகில் சினேகமும்
சுமந்து திரியும் மழைக்குருவியே
உனக்காக திறந்தே
கிடக்கின்றன என் சன்னல்கள்!

குடையும் ஆகிறாய்...

வறண்டு கிடக்கும்
வானத்தின் ஓரத்தில்
திடீரெனத்திரண்ட மேகம்போல்
கணத்தில் தோன்றி
காதல் பொழிகிறாய்!

குளிர் காற்றாய் காதோரம் முத்தமிட்டு
மயிற்கூச்செரிய மந்தகாசம் செய்து
மயங்க வைக்கிறாய்
மின்னல் சிரிப்பில்!

இடியுடன்கூடிய
மழைவரக்கூடுமென
வாநிலை அறிக்கை கூட
எச்சரிக்கை செய்யவில்லை...

எதேட்சையாய்
எங்கிருந்தோ வந்து
என் வானவெளியெங்கும்
நின்று பொழிகிறாய்...

இடியோசை இன்னிசை பாட
திடீரென கொட்டித்
தித்திக்கும் மழையில்
நான் திக்குமுக்காட
சிறகு விரித்து சேய்பேனும்
சிட்டுக்குருவியாய் - எனை
கட்டிக்கொண்டு கதகதப்பூட்டி
குடையும் ஆகிறாய்...


Wednesday 6 February 2013

என் காதல் இன்னும் குழந்தை தான்

மௌனமாய் தொடரும் இந்த
நீண்ட பொழுதுகளில்
ஓயாமல் பேசிக் கொண்டுதானிருக்கிறேன்.

கடந்து செல்லும் தேன்றலிடமும்,
எதிர்ப்படும் மரங்களிடமும் - என்
உடனமர்ந்து வாயாடும் நிலவிடமும்!

உன் பார்வைகளின் வீரியம்
இன்னும் பல பூகம்பங்களை
பிரசவிதுக் கொண்டேதானிருக்கிறது
என் ரத்த நாளங்களில்!

ஒரு நொடி முத்தமிட்டு,
மறுநொடி கொலைசெய்யும்
உன் விழிகளை நினைத்தாலே
கொஞ்சம் நடுங்கவே செய்கிறது என்  பெண்மை!

பாவம் என் காதல் இன்னும் குழந்தை தான்.
இந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்கள்
கொஞ்சம்  அதிகப்படி தான்...! 

Sunday 20 January 2013

ஏக்கம்.

வெம்மையில் தவித்த
என் தேகம் குளிர்வித்த தென்றலே
எப்படிச்சொல்வேன் கடந்து சென்றுவிட்ட உன்னிடம் ?

என் கேசம் நுழைந்து
சுவாசம் நிறைந்த
என் தென்றலுக்காக
இன்னும் ஏங்கித்தான் நிற்கிறேன் என்று!

உயிருடன் தான் இருக்கிறேன்...

பூமி என் காலடியில் நழுவி
எங்கோ ஓடித்தொலைகிறது.

கண்கள் இருண்டு  - ஏதோ
சூன்யதுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன.

என் புலன்கள் என்னை மீறி
வேலை நிறுத்தம் செய்கின்றன.

எதிரில் நடக்கும் எதுவும் தெரியவில்லை,
உறத்துக்குபிடும் கூப்பிடும் குரல் கூட உட்செல்லவில்லை.

எங்கோ இடித்துக்கொண்டும்
தொடர்ந்து நடக்கிறேன்.
ஜடமாய்!

எதுவும் தோன்றவில்லை...

அறிவில் பரவும் இருளில்,
 கடைசியாய் பார்த்த உன் முகம் மட்டும்
 அருகில் வருவதும்,
 தொலைவில் சென்று புள்ளியாய் மறைவதுமாய்
 என்னை,
 இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது.